நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வழக்குகளில் சாதகமான பதில் மனு தாக்கல் செய்வதாக தமிழக அரசை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் பாராட்டியுள்ளனர். இந்த நல்ல மாற்றம் தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சிலர் சொந்த பட்டா நிலத்துக்கு வழிப்பாதை இல்லாததால், நிலங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, நீர்நிலை புறம்போக்கு பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஊராட்சி அதிகாரிகள் உதவியுடன் முறைகேடாக பட்டாக்கள் பெற்று, தற்போது தார் சாலைகள் அமைத்து வருகின்றனர். எனவே சட்டவிரோத பட்டாக்களை ரத்து செய்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி விசாரித்தனர். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி தார் சாலை போடப்பட்டுள்ளபகுதிகள் நீர்நிலைகள்தான், அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.இதை தொடர்ந்து நீதிபதிகள் தெரிவித்ததாவது:சம்பந்தப்பட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். 3 மாதங்களுக்கு பின்னர், வழக்கை விசாரணைக்கு எடுக்கும்போது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதே அமர்வில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் புகார் குறித்து உரிய அளவீடு செய்து ஆக்கிரப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத சூழல் இதுவரை இருந்தது. தற்போது அரசே அக்கிரமிப்புகள் அகற்றப்படும் என பதில் மனு தாக்கல் செய்வதை பாராட்டுகிறோம். இந்த உண்மையான நல்ல மாற்றம் தொடர வேண்டும் என்றனர்.
